டிச.17ல் பாமக நிர்வாகக்குழு கூட்டம் - ராமதாஸ் அறிவிப்பு...!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
பாமகவை பொருத்தவரை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் பாமக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனுக்களை விண்ணப்பிக்கலாம் என்று அன்புமணி ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வரும் 17 ஆம் தேதி கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் 17.12.2025 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, அடுத்த கட்ட செயல்பாடுகள் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட முக்கியமான கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.