For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

I.N.D.I.A கூட்டணியில் இந்தி-யால் சலசலப்பு? "கை” கோர்த்த தலைவர்களுக்குள் முரண்பாடு!

09:15 PM Dec 23, 2023 IST | Web Editor
i n d i a கூட்டணியில் இந்தி யால் சலசலப்பு   கை” கோர்த்த தலைவர்களுக்குள் முரண்பாடு
Advertisement

I.N.D.I.A கூட்டணியில் இந்தி-யால் சலசலப்பா? "கை” கோர்த்த தலைவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டதா? டில்லியில் நடைபெற்ற 4-ஆவது கூட்டத்தில் நடந்ததுதான் என்ன? பார்க்கலாம்.....

Advertisement

2024 மக்களவைப் பொதுத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று, 3வது முறையாக ஆட்சியமைக்க பாரதிய ஜனதா கட்சி வியூகம் வகுத்து வருகிறது. இதைத் தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகியுள்ளன. ஆனாலும் கூட, நல்லாட்சியின் வெளிப்பாடாக 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்கட்சிகளைப் பொருத்தவரை, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பிகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களின் முன்னெடுப்பில் டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மகராஷ்ட்ரா முன்னாள் முதலமைச்சர்கள் சரத் பவார், உத்தவ் தாக்ரே, உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் ’’கை’’ கோர்த்துள்ளனர்.

தெற்கே உருவான தேசிய I.N.D.I.A கூட்டணி

இந்த தலைவர்கள் அமைத்துள்ள கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அடுத்த மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்தான் I.N.D.I.A என்று கூட்டணியின் பெயர் முடிவாகியது. இதையடுத்து I.N.D.I.A கூட்டணியின் 3வது கூட்டம் மகராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, 4வது கூட்டம் டெல்லியில் டிசம்பர் 19ம் தேதி நடைபெற்றது.

இந்த கூட்டணியில், ’’கொள்கை முரண்களைக் கொண்ட கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. தேர்தல் வரைக்கும் கூட இந்த கூட்டணி இருக்காது. அரசியல் வாரிசுகளும் வாரிசுளைக் காப்பவர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்’’ என்று விமர்ச்சித்து வருகிறது பாஜக. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டாலும், அதை I.N.D.I. கூட்டணி என்றே பாஜக-வினர் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.

இந்தி-யால் வந்த சிக்கல்

இந்நிலையில், I.N.D.I.A கூட்டணிக்குள் இந்தி-யால் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணிக் கூட்டத்தில் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பேச்சை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். ஏனெனில், கூட்டணியின் முந்தைய கூட்டங்களில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் எம்.பியான மனோஜ் கே. ஜா நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் பேச்சுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஆனால், டெல்லி கூட்டத்தில், மொழி பெயர்க்கத் தேவையில்லை. இந்தியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று நிதிஷ்குமார் கூறியதாக சொல்லபடுகிறது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, மாநில சுயாட்சி என்று பேசி வரும் திமுக இதற்கு அமைதியாக இருந்து விட்டது என்றும் பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பிரதமர் வேட்பாளர் தேர்வு?

இது ஒருபக்கம் இருக்க, கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்மொழிய, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழி மொழிந்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று மல்லிகார்ஜுன கார்கேவே தெரிவித்துள்ளார். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அல்லது பிரதமர் வேட்பாளர் விருப்பத்தில் உள்ள நிதிஷ்குமாரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள திமுக, காங்கிரஸ் தலைவர்கள் பலரின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை விரும்புகிறார்கள். இதை கூட்டணியில் உள்ள பிற முக்கிய கட்சிகள் விரும்பவில்லை. இதன் வெளிப்பாடுதான் நிதிஷ்குமார் போன்றோரின் அதிருப்தி என்கிறார்கள்.

எழும் புதிய சர்ச்சைகள்

மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சிகளைக் கண்டு கொள்ளவில்லை. தனித்து செல்வாக்கை காட்ட நினைத்தது. இந்த தேர்தல் கொடுத்த பாடத்தையடுத்து நடைபெறும் கூட்டம் என்பதால், டெல்லி கூட்டம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. தொகுதிகள் குறித்து இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்திலும் உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. தொகுதிப் பங்கீடும் இறுதி செய்யப்படவில்லை. மாறாக புதிய சர்ச்சைகள் உருவாகியுள்ளன என்கிறார்கள்.

ராகுலை விமர்சிக்கும் மம்தா

நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் 141 இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் போல் நடித்துக் காட்டினார். இதற்கு பிரதமர் மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ‘’குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரைப் போல் கல்யாண் பானர்ஜி நடித்ததை, ராகுல் காந்தி வீடியோவாகப் பதிவு செய்யாமல் இருந்திருந்தால், பிரச்சினையாக ஆகியிருக்காது” என்றார்.

தேர்தல் அறிக்கை குழு அமைப்பு

இது ஒருபக்கம் இருக்க, வலுவாக உள்ள மாநிலக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் விரும்பினாலும் தலைமை விரும்பவில்லை என்கிறார்கள். I.N.D.I.A கூட்டணியின் பொது செயல் திட்டம் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படும். மாநிலக் கட்சிகளை விட தாங்கள்தான் பெரியண்ணன் என்பதை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறதா? என்கிற கேள்வி கூட்டணிக்குள் எழும்பும் என்கிறார்கள்.

பாஜக - காங்கிரஸ்: விமர்சனமும் பதிலடியும்

இவற்றின் மூலம், ’’இந்த கூட்டணி தொடர்வது சந்தேகமே என்கிற தங்கள் வாதம் வலுவாகிறது’’ என்கிறது பாஜக. அதேநேரத்தில், ’’முதலில், I.N.D.I.A கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் ஒரு கூட்டத்தை நடத்த முடியுமா ? என்றார்கள். ஆனால், ஒன்றுக்கு 4 கூட்டத்தை நடத்தி விட்டோம். எனவே நடைமுறைப் பிரச்சினைகளைக் கடந்து, பா.ஜ.க எதிர்ப்பு என்கிற அடிப்படையில் அனைவரும் ஒன்று பட்டு, வென்று காட்டுவோம்’’ என்கிறார்கள் I.N.D.I.A கூட்டணித் தலைவர்கள்.

பா.ஜ.கவின் விமர்சனம் பலிக்குமா? பன்முகத் தன்மையுடன் ஒன்று பட்டு, வெற்றி பெறுமா I.N.D.I.A கூட்டணி...? காத்திருப்போம்....

Tags :
Advertisement