வடசென்னை மக்களையில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு?
வடசென்னை மக்களவை தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யார் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது பற்றி நியூஸ் 7 தமிழின் களம் யாருக்கு பகுதியில் காணலாம்…
திமுக வேட்பாளர்கள் பட்டியலில் வடசென்னை தொகுதியைப் பொறுத்தவரை கலாநிதி வீராசாமிக்கு ஒதுக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனான கலாநிதி வீராசாமி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் காரணமாக மீண்டும் திமுக சார்பில் அவரையே வடசென்னை தொகுதியில் நிறுத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதேபோல அதிமுக சார்பில் வடசென்னை தொகுதி வேட்பாளராக போட்டியிட இரு மாவட்டச் செயலாளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு வென்ற வெங்கடேஷ் பாபு, மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் பாலகங்கா ஆகியோரின் பெயர்கள் முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், இவர்களில் ஒருவரே அதிமுக சார்பாக போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.பாஜக வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், வடசென்னை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை, அங்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பால் கனகராஜுக்கு, வடசென்னை தொகுதி வேட்பாளராகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.