உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த செப்டம்பர் 30ல் தொடங்கியது.
இதில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்று முடிவில் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தோல்வியடைந்ததை அடுத்து இந்தியா,தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இதையடுத்து இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இந்திய மகளிர் அணிக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவிற்கு என்ன ஒரு சிறப்பான தருணம்!. இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் தங்களின் தைரியம் மற்றும் சக்தியால் வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கின்றனர். நீங்கள் பயமின்றி, உறுதியுடன் உலகம் முழுவதும் மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்!" என்று பதிவிட்டுள்ளார்.
What a glorious moment for India! 🇮🇳 Our Women in Blue have redefined courage, grace, and power inspiring generations to come. You’ve carried the tricolour across the world with fearless, unbreakable spirit. Many congratulations! 🙏🏻 History has been made. Jai Hind! 🇮🇳 pic.twitter.com/5AMjZu94QT
— Rajinikanth (@rajinikanth) November 3, 2025