“கச்சத்தீவு பற்றி பேச பாஜகவிற்கு என்ன தகுதி உள்ளது?” - எடப்பாடி பழனிசாமி கேள்வி!
கச்சத்தீவு பற்றி பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ தகுதி இல்லை எனவும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்த கட்சி அதிமுகதான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து கார்னேசன் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அவர் பேசியதாவது,
“தமிழக மீனவர்களை சிறைபிடித்தபோது அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கச்சத்தீவு பற்றி பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ என்ன தகுதி இருக்கிறது. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்த கட்சி அதிமுகதான். தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயத்துக்காக இப்போது கச்சத்தீவை கையில் எடுத்துள்ளனர். 1974-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் மாநிலத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கச்சத்தீவை தாரை வார்த்தார்கள். கச்சத்தீவை மீட்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சி எடுத்தார்கள்.
2014 ஆட்சி மாற்றத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது. கச்சத்தீவு மீட்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. ஜெயலலிதா வைத்த கோரிக்கைக்கு தீர்வு காணவில்லை. ஆனால் இன்று மீனவர்கள் வாக்குகளை பெறவேண்டும் என்று அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவினர் கச்சத்தீவு பற்றி பேசுகிறார்கள்.
மீனவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் ஜெயலலிதா போட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அது மறுபரிசீலனை செய்வோம் என மனுதாக்கல் செய்யலாம். ஆனால், பத்து ஆண்டுகளை கழித்து விட்டு தற்போது பாஜக பேசுவது வேடிக்கையாக உள்ளது” என தெரிவித்தார்.