மதுரை அருகே பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் கொள்ளை: 4 பேர் கைது - 23 சவரன் நகை மீட்பு!
மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக எஸ்ஆர்வி நகர், நேதாஜி நகர், திருவள்ளுவர் நகர் பகுதிகளில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 32 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனைத் தொடர்ந்து திருநகர் காவல் நிலையத்தில் உரிமையாளர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் திருநகர் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ பேரரசி மற்றும் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
அவர்கள் வாகன சோதனையின் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் திருநகர் பகுதியில் திருடியது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவர் வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்கிலி மகன் சீமான் (49) என்பது தெரியவந்தது.
இதையும் படியுங்கள்: அடுத்த 3 மணி நேரத்திற்கு… சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு…
இவர் மீது ஏற்கெனவே 32 வழக்குகள் உள்ளன என்பதும் அவர் பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவரது கூட்டாளிகள் வாடிபட்டி அருகே விராலிபட்டியை சேர்ந்த சதாசிவம் மகன் சசிகுமார் (29) , தேனூர் பகுதியை சேர்ந்த பழனிக்குமார் மகன் முத்து (22), தேனூர் ராஜ்குமார் மகன் சிவராஜன் (25) ஆகியோர் பூட்டிய வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர்.
தொடர்ந்து கொள்ளையடித்த நகைகளை வாடிப்பட்டி, விராலிப்பட்டி கண்மாய்க்கரை மற்றும் தேனூர் பகுதியிலும் மறைத்து வைத்ததும் தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையை தொடர்ந்து திருநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் தனிப்படை போலீசார் கேரி பைகளில் கட்டி மறைத்து பதுக்கிவைத்த 23 சவரன் நகைகளை கைப்பற்றினர். மேலும் ரொக்கம் ரூ.48,000-யும் கைப்பற்றினர்.
தொடர் கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த சீமான், சசிகுமார் சங்கிலி, முத்து உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தற்தகாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் திருநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை போலீசாரை பாராட்டினார்.