For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமரின் வருகையும்... பாஜகவின் வியூகமும்...

08:47 PM Jan 02, 2024 IST | Web Editor
பிரதமரின் வருகையும்    பாஜகவின் வியூகமும்
Advertisement

’’எனது தமிழ்க் குடும்பமே...’’ என்று திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சைத் தொடங்கினார். இதற்கு முன்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ’’எனது மாணவக் குடும்பமே...’’ என்றார். அவரது பேச்சின் இடையே ’’எனது குடும்பம்’’ என்று அடிக்கடி குறிப்பிட்டார். மேலும், ‘’தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம், தனி சக்தி பெறுகிறேன்’’ என்றார் பிரதமர். அவரது தற்போதைய வருகை, அவருக்கு மட்டுமல்ல பாஜகவினருக்கும் தனி உத்வேகத்தை கொடுத்துள்ளது என்கிறார்கள். பிரதமர் வருகையை முன்னிட்டு, திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அதிகமாக அணிவகுத்த பாஜக கொடிகள், பதாகைகள், அரசு விழாவில் திரண்ட தொண்டர்கள், அவர்களின் முழக்கம். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது மோடி...மோடி... என்று உரக்கச் சொன்னது அவர்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தியது.

Advertisement

மு.க.ஸ்டாலின் தொட்ட அரசியல்

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

’’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று திராவிடக் கொள்கையை தமிழ் நிலத்தில் முழங்கிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்கிறேன். நாட்டிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. உயர்கல்வி குறித்த எந்தப் பட்டியல் எடுத்தாலும், அதில் தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள்தான் அதிகமாக இடம்பெற்றிருக்கும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நீதிக் கட்சி ஆட்சிக்காலத்தில் கல்விக்காகப் போடப்பட்ட விதைதான், இன்றைக்கு வளர்ந்து, கல்வியில் சிறந்த மாநிலமாக, நாம் உயர்ந்து நிற்கிறோம். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கல்லூரிக் கல்வி - அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி என்ற இலக்கோடுதான் சமூகநீதிப் புரட்சியை கல்வித் துறையில் திராவிட மாடல் அரசு நடத்தி வருகிறது. ‘இன்னார்தான் படிக்க வேண்டும்’ என்று இருந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் அனைத்து விதமான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறோம்’ இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

அரசியல் முழக்கமல்ல...

தொடர்ந்து விமான நிலையத்தில் நடைபெற்ற விழாவில், பேரிடர் நிவாரண நிதி, பெல் நிறுவனத்திற்கு பணியாணைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் முன் வைத்தார் முதலமைச்சர். இதையடுத்து, “தொடர்ந்து கோரிக்கையாக வைக்கிறோமே என்று நினைக்க வேண்டாம். மாநிலத்துக்காக கோரிக்கை வைப்பதும், மாநில உரிமைகளை நிலைநாட்டுவதும், மக்களின் கோரிக்கைகள்தானே தவிர, அரசியல் முழக்கங்கள் அல்ல” என்றும் விளக்கமளித்தார் முதலமைச்சர். அவர் அரசியல் முழக்கமல்ல என்றாலும் அவை அரசியல் முழக்கமாகவும் பார்க்கப்பட்டது.

புரிந்து கொண்ட தொண்டர்கள்

அரசு விழாவில், நிறைவாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. அதேநேரத்தில், முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அளித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு அளித்துள்ளது. தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் நிதியை அளித்து வருகிறது என்றவர், முன்னதாக, “தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

புதிய எண்ணமும் செயல்திட்டமும் உள்ள அவர்களிடம் இருக்கும் உற்சாகம், வளர்ந்த இந்தியாவின் நம்பிக்கையாக மாறும்” என்றார் பிரதமர் மோடி. முதலமைச்சர், பிரதமர் இருவரும் அரசியலை மேலோட்டமாக தொட்டுப் பேசினாலும், தொண்டர்களுக்கு அவை ஆழமாகவே புரிந்தது.

‘நாங்க இருக்கிறோம்..’ - சந்தித்த கூட்டணி கட்சிகள்

புத்தாண்டில் இதுதான் முதல் பயணம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முக்கிய கட்சியான அதிமுக விலகிய பிறகு தமிழ்நாட்டுக்கான அவரது முதல் பயணமும் இதுதான். திருச்சிக்கு வந்த அவரை பாஜக தலைவர்கள் மட்டுமின்றி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகினாலும் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டும் வகையில் இந்த சந்திப்பு அமைந்தது என்கிறார்கள் மூத்த தலைவர்கள். அதேபோல், தேமுதிக அல்லது அக்கட்சியின் வாக்கு வங்கியை கவரும் வகையில், விஜயகாந்த் குறித்தும் பேசியுள்ளார் என்கிறார்கள்.

பாஜகவின் வியூகம் என்ன?

இரண்டு விழாக்களையும் முடித்து விட்டு புறப்பட்ட பிரதமர், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, பிரச்சார வியூகம், தொகுதிகள் பகிர்வு உள்ளிட்டவை குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் கோடிட்டு காட்டிள்ளார். பிரதமருடனான சந்திப்பிற்கு பிறகு கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பாஜக தலைமையிலான கூட்டணி வலுவாக அமையும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் கடுமையாக பணியாற்ற வேண்டும் என்று வழக்கமான ஆலோசனைகளுடன், தமிழ்நாட்டில் இருந்து இந்த முறை மக்களவைக்கு பாஜகவினர் கட்டாயம் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். அறிவுறுத்தல் மட்டுமின்றி வியூகங்களையும் விளக்கியுள்ளனர் என்கிறார்கள்.

தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள், தேசியத் தலைவர்களின் தமிழ்நாட்டு வருகை அடுத்தடுத்து இருக்கும். இந்த ஆண்டில் தமிழ்நாட்டு பாஜக எம்பியின் குரல் மக்களவையில் ஒலிக்கும் என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில். நம்பிக்கை நடக்குமா... தமிழ்நாட்டில் தாமரை மலருமா...? காத்திருப்போம்...

Tags :
Advertisement