பீகாரில் ஆட்சியமைக்க நிதீஷ் குமார் கோரிக்கை!
பீகாரில் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க நிதீஷ் குமார் பீகார் ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார்.
பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பீகார் முதலமைச்சர் பதவியை இன்று நான் ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளேன். இந்தியா கூட்டணியில் விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. நான் காயப்படுத்தப்பட்டேன். எனவே, இந்தியா கூட்டணியை விட்டு நான் வெளியேறிவிட்டேன்” என தெரிவித்தார்.
இதனிடையே, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில், கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக மாநில தலைவர் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக விஜய் குமார் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை நிதீஷ் குமார் ஆளுநரிடம் வழங்கினார். தொடர்ந்து பீகாரில் ஆட்சி அமைப்பதற்கும் உரிமை கோரியுள்ளார். 243 உறுப்பினா்களைக் கொண்ட பீகாா் சட்டப் பேரவையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவுக்கு உள்ள 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை பீகார் ஆளுநரிடம் நிதீஷ் குமார் வழங்கினார். இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக நிதீஷ் குமார் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.