அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்காலிகமாக அஜித்குமார் (29) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த கோயிலுக்கு சென்ற பெண்ணின் காரில் இருந்த நகை மாயமான சம்பவம் தொடர்பாக அஜித்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் கொடூரமாக தாக்கியதில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரின் உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்தாகவும், மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாகவும், சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டதாகவும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நகை மாயமானது குறித்து FIR பதிவு செய்யாமலேயே போலீசார் எவ்வாறு விசாரணை நடத்தினர்? என அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த வழக்கில், காவல் உயர் அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் ஆகியோர் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும், அஜித்குமாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.