"சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?" - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 40-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏதேனும் மிகப்பெரும் அசம்பாவிதம் நிகழும் முன்னர், உடனடியாகத் தக்க மருத்துவ மற்றும் நிவாரண நடவடிக்கைகளை எடுத்து மக்களைக் காக்க வேண்டும் எனத் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இதே பள்ளிப்பட்டு பகுதியில் கடந்தாண்டு கழிவு நீர் கலந்த குடிநீரால் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அதன்பின் கடந்த மாதம் 10 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதேபோல மீண்டுமொரு சம்பவம் தலைதூக்கியிருப்பது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகிறது.
https://x.com/NainarBJP/status/1990684771673124967
கடந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம், சில மாதங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் உறையூர் என மாவட்ட வித்தியாசமின்றித் தொடர்ந்து தமிழகத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து, அப்பாவி உயிர்கள் பலியாகி வரும் நிலையில், சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு எனும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
சுகாதாரமான குடிநீரைக் கூட வழங்க இயலாத ஆட்சியை நடத்திக் கொண்டு, "நாடு போற்றும் நல்லாட்சி" என முதலமைச்சர் வெற்றுப் பெருமை பேசுகிறார். இப்படி, அப்பாவிப் பொதுமக்களின் உடல்நலத்தோடும் உயிரோடும் விளையாடும்
திமுக அரசின் 'மீண்டுமொரு முறை ஆட்சியைப் பிடிக்கும் கனவு' கானல் நீராகவே ஆகும்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.