”அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் குறித்து இதுவரை வழக்கு பதியவில்லை” - அண்ணாமலை...!
தமிழ் நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அமைச்சர் கே.என். நேரு துறையில் ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. ஆனாலும் அவர் மீது இதுவரை வழக்கு பதியவில்லை.
டிச. 3ம் தேதி பொறுப்பு டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், நகராட்சி நிர்வாகத்தின் குடிநீர் வழங்கல் துறையில், 1020 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்படுள்ளது. ஆனால் அமைச்சர் நேரு இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி எளிதாக கடந்து சென்றுள்ளார்.
ஊராட்சி செயலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி பெற்றுள்ளனர். முதல்வர், அமைச்சர் நேரு ஆகியோர் எதையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்க கோரி 120 எம்பிக்கள் கையெழுத்து போட்டு மனு கொடுத்துள்ளனர். திமுகவினர் நமது நீதித்துறையின் நடவடிக்கைகை கேலிக்கூத்தாக்கி இருக்கின்றனர். நீதியரசர்கள் இன்றைக்கு இங்கே நேர்மையான முறையில் பணியாற்றுவதற்கு இடம் இல்லை. தமிழக அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் இணைய வேண்டும் என்பதை அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் முடிவு செயய்வார்கள். பாஜக - அதிமுக கூட்டணிக்கு இன்னும் வலிமையான கட்சிகள் வரும்” என்று பேசினார்.