மேகதாது அணை விவகாரம் ; தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுக்கும் திமுக - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
அதிமுக பொதுச்செயளாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து வரும் கர்நாடக அரசு, இன்றைய தினம் அணையை கட்டுவது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தின் சார்பில் வலிமையான வாதங்களை வழக்கறிஞர்கள் மூலம் எடுத்து வைக்காமல், "ஏனோ தானோ" என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுப்பதே வாடிக்கையாகி விட்டது.
திமுக தலைமை தங்களுடைய சுயநலத்திற்காக, தங்களின் குடும்பத் தொழிலை பாதுகாக்க கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு லாலி பாடும் போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திமுக-வின் இந்த துரோகச் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும். இனியாவது தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் நினைப்பை கைவிட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.