கரூர் விவகாரம் : உயர்நீதிமன்றம் விசாரித்ததில் சில தவறுகள் உள்ளது - உச்சநீதிமன்றம்!
கரூர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரித்தது.
தவெக தரப்பு:
இந்த விவகாரத்தில் கடந்த முறை நீதிமன்றம் எட்டு வாரத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய கூறியதுடன், சென்னை உயர்நீதிமன்றம் பதிவாளர் தரப்பிலும் பதிலளிக்க கூறி உத்தரவிட்டது. அதை வேளையில் இந்த கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை என்பது தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது.
நீதிபதிகள்:
சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி இருக்கின்றனரா? என்று கேள்வி எழுப்பினர்.
சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தரப்பு:
பதிவாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்காத காரணத்தினால் இந்த விவகாரத்தில் இதுவரை பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்தது.
தமிழ்நாடு அரசு:
கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் என்பது அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆணையத்தை பொறுத்த வரை விசாரணை அமைப்புகளின் புலன் விசாரணைக்குள் தலையிடாமல் தனியாக சுய தீன விசாரணையை நடத்தும். எனவே தனி நீதிபதி ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பு:
ஒரு நபர் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை வைக்காத நிலையில் உச்சநீதிமன்றம் ஆணையத்துக்கு தடை விதித்துள்ளது. எனவே தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதேபோல உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு ஒரு திறமையான அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டது. அவர் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் அல்ல ஆனால் தமிழக பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. அவருடைய தலைமையில் வைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் அரசின் தலையீடு இருப்பதாக கூறுவது தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள்:
சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக கரூர் விவகாரம் தொடர்பான மனுவை விசாரித்ததில் குழப்பம் உள்ளது. மேலும் சில தவறுகள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். குறிப்பாக உயர்நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறுகள் உள்ளது என்றே கருதுகிறோம்.
ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரணை நடத்தி வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பிரதான அமர்வு எவ்வாறு கரூர் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்தது என்பது தொடர்பான அறிக்கையை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த பின்பு அது குறித்து விவாதிக்கலாம் என தெரிவித்தனர்.
எனவே சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அறிக்கையை சமர்ப்பிப்பது தொடர்பாக நோட்டீஸ் பிறப்பிப்பதாக நீதிமபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.