For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!

04:42 PM Jan 13, 2024 IST | Web Editor
‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு
Advertisement

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‛இந்தியா’ கூட்டணியின் தலைவராக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தேர்வு செய்ய திட்டமிட்டநிலையில்,  அவர் மறுப்பு தெரிவித்ததால் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இந்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் 4 ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற்றன.

இதற்கிடையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பெயரை பரிந்துரை செய்தார். இதனால் நிதிஷ் குமார் தனது அதிருப்தியை டெல்லியில் காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் நடந்து முடிந்த ‛இந்தியா’ கூட்டணியில் வெளிக்காட்டினார். நிதிஷ் குமார் ஹிந்தியில் பேசியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி டிஆர்.பாலுவுக்கு புரியவில்லை. இதையடுத்து நிதிஷ் குமாரின் கட்சியை சேர்ந்த எம்பியை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய டிஆர் பாலு கூறினார். இதற்கு நிதிஷ் குமார் கடிந்து கொண்டார். ஹிந்தி கற்று கொள்ள வேண்டும் என காட்டமாக தெரிவித்தார். இது விவாதத்தை கிளப்பியது. 

இதனால் ‛இந்தியா’ கூட்டணியில் தனக்கு முக்கியத்துவம் வழங்காத பட்சத்தில் அவர் மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்கலாம் என்ற தகவல் பரவ தொடங்கியது. இந்நிலையில் நிதிஷ் குமாருக்கு ‛இந்தியா’ கூட்டணியில் முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ‛இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை நிதிஷ் குமாருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக பிற எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் வகையில் இந்த வாரமே வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்வை குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது.  திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். ஆனால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. 

இந்தக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரை இந்தியா கூட்டணியின் தலைவர் பொறுப்பை ஏற்க வலியுறுத்திய நிலையில், அவர் மறுத்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகின. தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்ததுடன் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று நிதீஷ் குமார் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

அதன்படி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

Tags :
Advertisement