"மத்திய அரசுடன், மாநில அரசு முரண்பாடோடு செயல்பட்டால் எந்த பலனும் கிடைக்காது" - நயினார் நாகேந்திரன்!
டெல்லியில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது "பாஜகவின் சார்பாக துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்ததற்கு தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு பாஜக தலைமை பெருமை சேர்த்துள்ளது. உலகத்தில் எங்கு சென்றாலும் தமிழர்களின் திறமையை வெளிப்படுத்தியவர் பிரதமர் மோடி. மேலும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெருமை அடைய செய்துள்ளது.
தமிழர் என்ற முறையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக முதல்வர் முழு ஆதரவு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா கூட்டணி பற்றி நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. தமிழர்களுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை, ஒரு தமிழராக பார்க்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பிற முக்கிய பொறுப்புக்களில் நியமிக்கப்படுள்ளனர்.
தமிழ்நாட்டின் நலனுக்காகவே அகில இந்திய பாஜக தலைமை செயல்படுகிறது. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கேட்டு தமிழக முதலமைச்சரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் சந்தித்து பேசி இருப்போம். தமிழ்நாட்டில் பாஜகவின் கட்டமைப்பை பலப்படுத்த பூத் அளவிலான நிலையை தமிழக பாஜக வலுப்படுத்தி வருகிறது.
பிரதமர் தமிழகத்தை நேசிக்கிறார். அவர் தொடர்ந்து தமிழகம் வர விரும்புகிறார். மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசுடன் தொடர்ந்து முரண்பாடாக மாநில அரசு செயல்பட்டால் எந்த பலனும் கிடைக்காது. இந்தியா கூட்டணி ஒரு தமிழரை வேட்பாளராக நிறுத்தினால், அது தேவையற்ற போட்டியாக இருக்கும்.