"ஆளுநர் உரை உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவு பண்டம்" - இபிஎஸ் விமர்சனம்!
ஆளுநர் உரை உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவு பண்டம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழில் வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார். ஆனால், சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கமால் 2 நிமிடங்களில் புறக்கணித்தார். அதன் பின், சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர். என்.ரவி வெளிநடப்பு செய்தார். இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்தித்தார்.
இதையும் படியுங்கள் ; சவார்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல – சபாநாயகர் அப்பாவு!
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கவில்லை. ஆளுநர் உரையில் எதிர்வரும் ஆண்டில் என்னென்ன நலத்திட்டங்கள் தமிழ்நாடு மக்களுக்காக கொண்டு வரப்படும் என்ற குறிப்பு இருக்க வேண்டும். ஆனால்,சென்ற ஆண்டு போலவே எந்த வித குறிப்பும் இல்லை, மேலும் இந்த அரசின் கொள்கையை விளக்கும் உரையாகவும் இல்லை. மேலும், ஆளுநரின் இந்த உரை வார்த்தை ஜாலங்களால் ஆளுநர் உரை அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரை உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவு பண்டம். தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஆளுநர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது அரசுக்கும் ஆளுநருக்கும் உள்ள பிரச்னை. அவர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும்.
ஆளுநர் தனது உரையை புறக்கணித்தது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்தான் கேட்க வேண்டும். ஆளுநருக்கு என்ன பிரச்னை என்பதை தமிழ்நாடு அரசு, ஆளுநர் மற்றும் சபாநாயகரிடம் தான் கேட்க வேண்டும். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் மரபை கடைபிடிக்கவில்லை"
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.