டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் | முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு!
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரிவிந்த கெஜ்ரிவால், தற்போதைய முதலமைச்சர் அதிஷி உள்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பாஜக 44 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் டெல்லி சட்டசபை தேர்தலை 3 முறை வென்று ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி 21 இடங்களில் மட்டும் முன்னிலை வகித்து பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இந்த தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் போட்டியிட்டார். இதில், தற்போதைய நிலவரப்படி கெஜ்ரிவால் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜகவின் பர்வேஷ் ஷர்மா முன்னிலை பெற்றுள்ளார்.
அதேபோல டெல்லியில் தற்போதைய முதலமைச்சர் ஆதிஷி, ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களான மனிஷி சிசோடியா, சோம்நாத் பார்தி ஆகியோரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு சந்தித்து இருப்பது ஆம் ஆத்மி கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால், இந்த முறை டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கு என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் பாஜகவினர் கொண்டாட்டங்களுக்கும் தயாராகி வருகிறார்கள்.