தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் என்றும், கடைசி வரை பாஜக கூட்டணியில் தான் இருப்பேன் என்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக - நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். இதனையடுத்து நிதிஷ்குமாரின் ஜேடியூ-காங்கிரஸ்- ஆர்ஜேடி-இடதுசாரிகள் இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த கூட்டணியில் இருந்தும் அண்மையில் நிதிஷ்குமார் விலகி மீண்டும் பாஜக அணியில் இணைந்தார்.
இதனையடுத்து கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை பதவியை ராஜினாமா செய்துவிட்டு 3வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் நிதிஷ்குமார். தொடர்ந்து நிதிஷ்குமார் அரசு மீது கடந்த பிப். 12-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 243 எம்எல்ஏக்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 129 எம்எல்ஏக்கள் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது பேசிய நிதிஷ்குமார், பீகார் மாநிலத்தில் ஏராளமான வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. பொருளாதார ரீதியாக மாநில மக்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். அதற்கெல்லாம் காரணம் மத்திய அரசின் ஒத்துழைப்பு. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். இனிமேல் அணி மாற மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். பாஜக கூட்டணியில் தான் கடைசி வரை நீடிப்பேன் என்பதை பிரதமர் மோடிக்கு உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.