தமிழக அரசின் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.என் ரவிக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. மாநிலத்தால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றமானது மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்தை உயர்த்துவது, சிறு குற்றங்களுக்கு சிறைத்தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்பட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதேபோல், 2 முறை நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளார். மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அரசு நாளிதழில் வெளியிடப்பட்டு பின்னர் அவை சட்டமாக அமலுக்கு வரும்.
 
  
  
  
  
  
 