"கூட்டணி ஆட்சியை பொருத்தவரை மக்களின் எண்ணம் தான் அதிமுக எண்ணம்" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி!
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் அருகே உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தனியார் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர், "ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானின் முதல் படை வீட்டில் நடைபெறக்கூடிய
குடமுழுக்கு விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மதுரை மக்களின் பக்த கோடிகளின் வேண்டுகோள் தான் இது. தமிழக முழுவதும் இன்று பேசு பொருளாக இருப்பவர் திருப்பரங்குன்றம் முருகன்தான்.
திருப்பரங்குன்றம் கோயிலில் திருமணம் நடைபெற்றால் மணமக்களுக்கு இடையே பிரிவினை ஏற்படாது. அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறியதற்கு பதில் அளித்த செல்வராஜ் இதுகுறித்து ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி விரிவாக கருத்து சொல்லிவிட்டார். தமிழக அரசின் செயல்பாடுகளில் தேக்க நிலை இருப்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். கூட்டணி குறித்தும் ஆட்சி அமைப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறிவிட்டார்.
தமிழ்நாடு மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து செயல்படக்கூடியவர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியின் பயணம் மக்கள் வெள்ளத்தில் சென்று கொண்டிருக்கிறது. மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம் அதுதான் எங்களுடைய திட்டம். மீண்டும் அதிமுக தான் வெற்றி பெறும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் நடத்துகிறார் என்றால் இதுவரை மக்களுக்கு அவர் எதுவுமே செய்யவில்லையா?
போய் மக்களை சந்தியுங்கள் என முதலமைச்சர் சொல்கிறார் என்றால் மக்களின் பிரச்சினைகளை இன்னும் ஆளும் திமுக அரசு தீர்க்கவில்லை என்று தான் அர்த்தம். கூட்டணி அமைப்பது, கூட்டணி ஆட்சி இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் என்ன சொல்கிறாரோ அதுதான் வேதவாக்கு. கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் பேசிய பிறகு அதில் மாற்றுக் கருத்து கிடையாது. எங்கள் பொதுச் செயலாளர் எல்லாம் அறிந்தவர்.
அவர் மக்களின் மனங்களை அறிந்து ஏற்கனவே கூட்டணி குறித்து தெளிவாக கூறிவிட்டார். கூட்டணி ஆட்சியை பொருத்தவரை மக்களின் எண்ணம் தான் அதிமுக எண்ணம். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என யாரும் நினைக்கக் கூடாது. கூட்டணி குறித்து யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லிவிட்டார். அதன் பிறகு நாங்கள் கருத்து கூறினால் அது சரியாக இருக்காது. விஜயின் ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு, தேர்தல் வருவதால் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டையும் கருத்தையும் எடுத்துச் சொல்வார்கள்.
அதைப்போல தான் இது. ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ மக்களிடத்தில் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் வகையில் செய்வார்கள். விஜயும் போராட்டம் நடத்தியுள்ளார். மதுரையில் விஜய் மாநாடு நடத்துவது குறித்த கேள்விக்கு, மதுரை மண்ணை மிதித்தால் வெற்றி கிடைக்கும் என எல்லோரும் நினைக்கிறார்கள்.
மதுரை மக்கள் விவரமானவர்கள் தங்கள் கொள்கைகளை மதுரை மக்களிடத்தில் எடுத்துச் சொல்வதற்காக சீமான் தம்பி விஜய் போன்றோர் மதுரையில் மாநாடுகளை நடத்துகிறார்கள். இருந்தாலும் மக்கள் எழுச்சியாக வந்தால்தான் வெற்றி கிடைக்கும். அழைத்து வந்தால் அதில் பயமில்லை. மக்களாக விரும்பி வந்து தலைவனுக்கு கை அசைக்க வேண்டும் வாழ்த்து சொல்ல வேண்டும்.
அதிமுகவோடு கூட்டணியில் உள்ள பாஜக ஆர்எஸ்எஸ் குறித்து விஜய் விமர்சிப்பது குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை நோக்கம் இருக்கும். விஜய் யாருடனாவது கூட்டணி வைத்தால் தான் தெரியும். ஆளுங்கட்சியில் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.