Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் உடலுக்கு என்ன ஆச்சு? டெல்லி திஹார் சிறை நிர்வாகம் பதில்!

03:35 PM Apr 03, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதிலிருந்து இப்போது வரை 4.5 கிலோ எடை குறைந்துள்ளார் என்று டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியிருந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளது என திகார் சிறைத்துறை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

Advertisement

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்,  நேற்று முன்தினம் மாலை திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியபோது,  ரத்தத்தில் சர்க்கரை அளவு 50-க்கும் குறைவாக இருந்தது.  மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவருக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.

முதல்வராக இருப்பவர் திகார் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறை.  அவர் 2-ம் எண் சிறையில் தனியாக அடைக்கப்பட்டார்.  மாலையில் அவருக்கு தேநீர் வழங்கப்பட்டது.  இரவில் வீட்டு சாப்பாடு சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது.  படுப்பதற்கு தரைவிரிப்பு,  இரண்டு தலையணை, ஒரு போர்வை வழங்கப்பட்டன. நள்ளிரவில் தூக்கம் இன்றி நடந்து கொண்டிருந்தார் என சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே,  மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டதில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் 4.5 கிலோ எடை குறைந்துள்ளதாக டெல்லி கல்வி அமைச்சரான அதிஷி குற்றச்சாட்டு எழுப்பினார்.  இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "கெஜ்ரிவாலுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது.  தனக்கு கடுமையான உடல்நல பிரச்சனைகள் இருந்தபோதிலும் தேசத்துக்கு சேவை செய்ய 24 மணி நேரமும் உழைக்கிறார்.  கைது செய்யப்பட்டதிலிருந்து இப்போது வரை,  அரவிந்த் கெஜ்ரிவால் 4.5 கிலோ எடை குறைந்துள்ளார்.

இது மிகவும் கவலை அளிக்கிறது.  பாஜக அவரது உடல்நிலையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.  கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால்,  நாடு மட்டுமல்ல, கடவுள் கூட அவர்களை மன்னிக்க மாட்டார்." என்று அதிஷி தெரிவித்திருந்தார்.

அதிஷியின் இந்த குற்றச்சாட்டை திகார் சிறை நிர்வாகம் மறுத்துள்ளது.  இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திகார் சிறை நிர்வாகம்,  கெஜ்ரிவால் சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது அவரது உடல்எடை 65 கிலோவாக இருந்தது.  அந்த எடையில் தற்போது எந்த மாற்றமும் இல்லை. அ வரது ரத்த சர்க்கரை அளவும் தற்போது சாதாரணமாகவே உள்ளது. இன்று காலை யோகா செய்த கெஜ்ரிவால் தனது சிறை அறையில் சிறிது தூரம் வாக்கிங் சென்றார்.

மதியம் மற்றும் இரவு வேளைகளில் அவரது வீட்டில் சமைத்த உணவுகளே வழங்கப்பட்டு அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  எந்தவொரு அவசர சூழ்நிலை ஏற்பட்டாலும் கண்காணிக்கும் வகையில் அவரது அறைக்கு அருகில் அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர்.  தற்போது வரை அவர் நலமாக இருக்கிறார்" என்று தெரிவித்தனர்.

Tags :
ArrestArvind KejriwalAtishiBJPDelhiEnforcement DirectorateMinisternews7 tamilNews7 Tamil UpdatesTihar Jail
Advertisement
Next Article