"தமிழ்நாட்டில் அமித் ஷா சைலெண்ட் ஆப்ரேசன் செய்ய உள்ளார்" - மதுரையில் நயினார் நாகேந்திரன் பேச்சு
மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஜுன் 8) நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி மேடையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பேசினர்.
அந்த வகையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேடையில் பேசியதாவது,
"சூரியன் வரும் சுட்டெரிக்கும் என்று இங்கு பந்தல் போட்டோம். ஆனால், அமித்ஷா இங்கு வருகிறார் என்பதால் சூரியனே மறைந்துபோய்விட்டது. செந்தூர் ஆப்ரேசன் போன்று, அமித் ஷா தமிழ்நாட்டில் சைலெண்ட் ஆப்ரேசன் செய்ய உள்ளார். எப்போதுமே திமுகவிற்கு ஷா என்றாலே பயம். இன்று பயந்து போய் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. தமிழ்நாட்டில் மது பழக்க வழக்கங்கள், தினசரி பாலியல் வன்கொடுமைகள். பாஜக சாதாரண கட்சி அல்ல, யாருடனும் இறங்கி போய்விட மாட்டோம். இபிஎஸ் தலைமையில் ஜனநாயக தேசிய கூட்டணி அமைந்தே தீரும். அதில், எந்த மாற்றமும் இல்லை. ஜூன் 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. முருகனை வணங்கி எது செய்தாலும் வெற்றி தான்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.