'விஜயகாந்த் மகன் படத்தில் இளையராஜா பாடிய பாடல்'.. - யுவன் சங்கர் ராஜா சொன்ன புது தகவல்!
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா போன்ற கமர்ஷியல் படங்களை இயக்கிய பொன்ராம் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் கொம்புசீவி. இதில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், தார்ணிகா, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யுவன்சங்கர்ராஜா பேசுகையில் ‘‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் விஜயகாந்த் பற்றி நிறைய பேச வேண்டும். அவர் படங்கள் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவர் இன்ஸ்பயரிங் நடிகர்.
விஜயகாந்த், பிரேமலதா தங்கள் திருமணம் முடிந்து, எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்தபோது, நானும் என் கசினும் டாடி பாட்டு போட்டு டான்ஸ் ஆடினோம். அதை மறக்கவே முடியாது. இந்த கதையை கேட்டு யார் ஹீரோ என்றபோது சண்முகபாண்டியன் என்றார். நான் யோசிக்காமல் ஓகே சொன்னேன். அவர் என் சகோதரர் மாதிரி. அவருக்கு சினிமாவில் நல்ல இடம் இருக்கிறது. சரத்குமார் படம் மூலம்தான் நான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனேன். அவரும் இந்த படத்தில் இருக்கிறார். இந்த படத்திற்கு ரசித்து இசையமைத்தேன்.
நான் விஜயகாந்தின் 'தென்னவன்' படத்திற்கு இசையமைத்தேன். ஆனாலும் அதற்கு முன்பே அலெக்சாண்டர் படத்துக்கு ரீ ரீக்கார்ட்டிங், ஒரு பாடல் பண்ணிக்கொடுத்தேன். இவர்கள் என் குடும்பம் மாதிரி. பொதுவாக, நான் இவ்வளவு பேச மாட்டேன். இந்த நிகழ்ச்சி என்பதால் பேச்சு வருகிறது. சரத்குமார் என் இசையில் பாட கேட்டு இருக்கிறார். விரைவில் அவரை பாட வைக்கப்போகிறேன். கொம்பு சீவியில் இடம் பெற்ற ஒரு அம்மா பாடலை எனது அப்பா இளையராஜா பாடியிருக்கிறார். அதில் நானும் இணைந்து பாடியிருக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து, இயக்குநர் பொன்ராம் பேசுகையில் ‘‘அந்த அம்மா பாடலை நீங்கள் பாட வேண்டும் என்று இளையராஜாவிடம் போய் நின்றேன். பல நாட்கள் காத்திருந்தோம். அவர் நிறைய கேள்வி கேட்டு, கடைசியில் பாடிக்கொடுத்தார்" என்றார். சண்முகபாண்டியன் பேசுகையில் ‘‘நான் அறிமுகம் ஆன 'சகாப்தம்' படத்துக்கு கார்த்திக்ராஜா இசைமைத்தார். படை வீரன் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். இந்த படத்துக்கு யுவன் இசையமைத்து இருக்கிறார்’’ என்றார்.
பட விழாவில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறுகையில் ‘‘இந்த படத்தில் அம்மா பாடலை கேட்டு, எங்கள் குடும்பத்தில் பலரும் கண் கலங்கினோம். சமீபத்தில்தான் என் அம்மா காலமானார். எனக்கும் யுவனின் அம்மா ஜீவாவிற்கும் நல்ல நட்பு உண்டு. அந்த காலத்தில் இளையராஜா இசையமைத்த படங்களுக்கு எங்களை அழைப்பார். நான் கேப்டன் படங்களை பார்க்க அழைப்பேன். குணத்தில் அவரின் அம்மா மாதிரியே யுவன் இருக்கிறார்’’ என்றார்.