உ.பி.யை தொடர்ந்து டெல்லியிலும் இறுதியானது INDIA கூட்டணியின் தொகுதிப் பங்கீடு - யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?
உ.பி.யை தொடர்ந்து டெல்லியிலும் INDIA கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது. யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து விரிவாக காணலாம்.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், சந்திரசேகர் ஆசாத் கட்சி ஒரு இடத்திலும் போட்டி என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்துள்ளது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 31 வேட்பாளர்களை ஏற்கனவே சமாஜ்வாதி கட்சி அறிவித்தது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரியங்கா காந்தி பேசிய நிலையில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தலில் காங்கிரஸ் – சமாஜ்வாதி இடையே கூட்டணி உறுதி என்று அகிலேஷ் யாதவும் பேட்டி அளித்துள்ளார். அகிலேஷ் யாதவ் கூறியதாவது, ‘காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக செய்த தில்லுமுல்லு போல் இதுவரை யாரும் செய்ததில்லை. பாஜக செய்த தில்லுமுல்லு செயல்களை உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ளது’ என தெரிவித்தார்.
#WATCH | Lucknow, UP: On seat sharing with Congress, Samajwadi Party leader Ravidas Mehrotra says "...SP and Congress will contest LS elections together. This will strengthen the INDIA alliance and INDIA will form its govt in 2024...We have tried to stop the scattering of non-BJP… pic.twitter.com/BvZ66bBBb0
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 21, 2024
இதை தொடர்ந்து காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ரவிதாஸ் மெஹ்ரோத்ரா கூறுகையில், " சமாஜ்வாதியும் காங்கிரஸும் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும். இது இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும். சமாஜ்வாதி கட்சி 62 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், சந்திரசேகர் ஆசாத் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடும். உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 இடங்களையும் பெற முயற்சிப்போம்” என தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தை இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்துள்ள நிலையில் தற்போது டெல்லியிலும் கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினிடையே பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்த நிலையில் தொகுதி பங்கீடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 4 ஆம் ஆத்மிக்கும் 3தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிகிறது.