"குடியரசுத் தலைவர் உரையில் 5 முக்கிய பிரச்னைகள் இடம்பெறவில்லை" - மல்லிகார்ஜூன கார்கே
குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் 5 முக்கிய பிரச்னைகள் பற்றி எதுவும் இடம்பெறவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியதை முன்னிட்டு, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இன்று உரையாற்றினார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் 5 முக்கிய பிரச்னைகள் பற்றி எதுவும் இடம்பெறவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, "பிரதமர் மோடி அரசு எழுதிக் கொடுத்த குடியரசுத் தலைவர் உரையைக் கேட்டேன். நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் '400 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெறுவோம்' என்ற முழக்கத்தை நிராகரித்துவிட்டனர்.
அதைவிட குறைவாக வெறும் 272 இடங்களையே அளித்துள்ளனர். பிரதமர் மோடியால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் பிரதமர் மோடி எதுவும் மாறவில்லை என்பதுபோல பாசாங்கு செய்கிறார். ஆனால், மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். மாநிலங்களவையில் நான் பேசுகையில் இது பற்றி விரிவாக சொல்வேன். அதற்கு முன்னதாக சில விஷயங்களை குறிப்பிடுகிறேன்.
நீட் முறைகேட்டில் கண்துடைப்பு எடுபடாது. கடந்த 5 ஆண்டுகளில், தேசிய தேர்வு முகமை நடத்திய 66 தேர்வுகளில், வினாத்தாள் கசிவு, முறைகேடு என 12 தேர்வுகள் மீது புகார்கள் எழுந்துள்ளது. இதனால் 75 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் பிரிவினைவாத அரசியல் செய்வதாகக் கூறிவிட்டு, பிரதமர் மோடி அரசு இந்த பொறுப்பிலிருந்து தப்பி ஓட முடியாது.
பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நீதி கேட்கிறார்கள். இதற்கு மத்திய கல்வித்துறை பொறுப்பேற்க வேண்டும். இரண்டு இளைஞர்களில் ஒருவர் வேலையின்றி இருக்கின்றனர். வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான எந்த தகவலும் குடியரசுத் தலைவர் உரையில் இல்லை. ஒட்டுமொத்த உரையிலும், ஐந்து முக்கிய பிரச்னைகள் பேசப்படவில்லை.
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்கள், பயணிகள் ரயில்கள் உள்பட நாட்டில் நிகழும் பயங்கர ரயில் விபத்துகள், ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள், தலித், பழங்குடியின மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் வன்முறைகள் அதிகரிப்பு போன்ற ஐந்து முக்கிய பிரச்னைகள் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெறவில்லை.
ஒட்டுமொத்தமாக, கடந்த மக்களவைத் தேர்தலில், மக்களால் நிராகரிக்கப்பட்ட பொய்களை எல்லாம், கடைசியாக ஒரு முறை நாடாளுமன்றத்தில் சொல்லி சில கைதட்டல்களையாவது பெறலாம் என்று பிரதமர் மோடி அரசு முயன்றுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
मोदी सरकार द्वारा लिखित राष्ट्रपति के अभिभाषण सुनकर ऐसा लगा जैसे मोदी जी जनादेश को नकारने की हर संभव कोशिश कर रहें हैं।
जनादेश उनके ख़िलाफ़ था, क्योंकि देश की जनता ने “400 पार” के उनके नारे को ठुकराया और भाजपा को 272 के आँकड़े से दूर रखा।
मोदी जी इसे स्वीकार करने को तैयार… pic.twitter.com/Y9ec0AJAhS
— Mallikarjun Kharge (@kharge) June 27, 2024