நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம் - ஜேடியூ எம்எல்ஏ புகார்!
பீகார் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம் பேசியதாக ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ சுதன்ஷு சேகர், அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்எல்ஏ மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் கடந்த 2020ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக- நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். இதனையடுத்து நிதிஷ்குமாரின் ஜேடியூ-காங்கிரஸ்- ஆர்ஜேடி-இடதுசாரிகள் இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த கூட்டணியில் இருந்தும் அண்மையில் நிதிஷ்குமார் விலகி மீண்டும் பாஜக அணியில் இணைந்தார்.
இதனையடுத்து கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை பதவியை ராஜினாமா செய்துவிட்டு 3வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் நிதிஷ்குமார். இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார் அரசு மீது கடந்த பிப். 12-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 243 எம்எல்ஏக்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 129 எம்எல்ஏக்கள் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க தனக்கு ரூ.10 கோடி பேரம் பேசியதாக ஜேடியு எம்எல்ஏ சுதன்ஷு சேகர் புகார் அளித்துள்ளார். “நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காமல், ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு வாக்களிக்கும்படி எங்கள் கட்சி எம்எல்ஏ சஞ்சீவ் குமார், எங்கள் கட்சியில் உள்ள மற்ற எம்எல்ஏக்களிடம் பேரம் பேசினார்.
எனக்கு ரூ.10 கோடி அல்லது அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசினர். இது தொடர்பாக பொறியாளர் சுனில் என்னை கடந்த 10-ம் தேதி தொடர்புகொண்டார். முதற்கட்டமாக ரூ.5 கோடி தருவதாகவும் வாக்கெடுப்பு முடிந்த பிறகு ரூ.5 கோடி தருவதாகவும் கூறினார். வாக்கெடுப்பில் பங்கேற்பதை தடுக்கும் நோக்கில் எங்கள் கட்சி எம்எல்ஏ-க்கள் பிமா பார்தி, மற்றும் திலீப் ராய் இருவரும் கடத்தப்பட்டனர். இந்தக் கடத்தலில் சஞ்ஜீவ் குமார் மற்றும் சுனில் ஆகிய இருவருக்கும் தொடர்பு உள்ளது” என்று அவர் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.