"கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்?" - காங். மூத்த தலைவர் கேள்வியும், கங்கனா பதிலும்...
“கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்? பிரதமர் ஏன் இப்படி அடி, முடி தெரியாமல் பேசுகிறார்?” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் எழுப்பிய கேள்விக்கு கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், கச்சத்தீவு பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்பதிவு அரசியல் வட்டாரத்தில் கச்சத்தீவு குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதனிடையே, பிரதமர் மோடி நேற்று முன்தினம் (ஏப். 9) மீண்டும் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரம் குறித்து தனது விமர்சனத்தை நேற்றும் (ஏப்.10) முன்வைத்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,
“ஒரு வாரத்துக்கு முன்பு நாம் கச்சத்தீவு பிரச்சினையை எழுப்பினோம். காங்கிரஸும், திமுகவும் ஒன்றாக சேர்ந்து இந்தியாவின் உயிரோட்டமான ஒரு பகுதியை வேறு நாட்டுக்கு தாரைவார்த்துக் கொடுத்தார்கள் என்பது குறித்து அரசு ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இந்தியா கூட்டணியினர் தேசத்தின் இறையாண்மையை சேதப்படுத்தியதற்கு பாவப்பட்ட தமிழக மீனவர்கள்தான் அதற்கான விலையைக் கொடுத்து வருகின்றனர். இந்த துரோகத்திற்கு, ஏப்ரல் 19-ம் தேதி மக்கள்தான் சரியான பாடம் புகட்ட வேண்டும்” எனக் தெரிவித்தார்.
இதனிடையே, போபாலில் நேற்று (ஏப். 10) செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், “கச்சத்தீவில் யார்தான் வசிக்கிறீர்கள்? பிரதமர் மோடி ஏன் இப்படி அடி, முடி தெரியாமல் பேசுகிறார்?” என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு நடிகையும், இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதி பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “அக்ஷய் சின் பகுதியை தரிசு நிலம் என்று நேரு அழைத்ததையே திக்விஜய் சிங்கின் ‘கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்?’ என்ற கேள்வி பிரதிபலிக்கிறது. நேருவின் சிந்தனை இன்னமும் காங்கிரஸ் கட்சியினர் மனங்களில் அப்படியே இருக்கிறது. இந்த மனப்பான்மை இருந்ததாலேயே இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் காங்கிரஸால் வளர்ச்சியைக் கொடுக்க முடியவில்லை.
नेहरू जी की अक्साई चिन को बंजर जमीन बताने वाली सोच आज भी कांग्रेस में जीवित है।
दिग्विजय जी का कच्चातिवु द्वीप को लेकर दिया गया बयान उसी सोच को दर्शाता है।
इसी मानसिकता के कारण कांग्रेस शासन में भारत के दूरस्थ क्षेत्रों में विकास नहीं हो पाया।
लेकिन यह नया भारत है, यहां देश… pic.twitter.com/sRcs5qVVZH
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) April 10, 2024
ஆனால், இது புதிய இந்தியா. இங்கு இந்தியாவின் மிக உயரமான தஷிகங் வாக்குப்பதிவு மையத்திலும் குழாய் மூலம் நீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோமிக் போன்ற இமாச்சலப் பிரதேச கிராமங்களுக்கு சாலை வசதி கிட்டியுள்ளது. வீடுதோறும் மின்சாரம் கிட்டியுள்ளது. நாட்டின் புவிபரப்பின் மீதான உரிமையில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படாது. அப்படியான சிந்தனை உடையவர்களுக்கு தேசம் நிச்சயம் தகுந்த பதிலடி கொடுக்கும்” என பதிவிட்டுள்ளார்.