பொள்ளாச்சி தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவது யார் யார்?
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யார் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது பற்றி நியூஸ் 7 தமிழின் களம் யாருக்கு பகுதியில் காணலாம்…
பொள்ளாச்சி தொகுதியை பொறுத்தவரை திமுக சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற சண்முக சுந்தரத்திற்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக பொறியாளர் அணியின் மாநில துணை செயலாளரான சண்முக சுந்தரம், கள அனுபவமும், மக்கள் ஆதரவும் பெற்றவர் என்பதால் அவர்தான் திமுக தலைமையின் முதல் சாய்ஸ் எனவும் கூறப்படுகிறது. பொள்ளாச்சி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற எம்.பி தயாநிதிமாறன், மீண்டும் சண்முக சுந்தரத்தையே வெற்றிபெற செய்யுங்கள் என சூசகமாக கூறிச் சென்றுள்ளார்.
சண்முக சுந்தரத்தை எதிர்த்து போட்டியிட அதிமுக சார்பில் அக்கட்சியின் நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார் களமிறக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக பொறுப்பு வகித்த கிருஷ்ணகுமார், அதிமுக-வின் முன்னாள் அமைச்சரான பொள்ளாச்சி ஜெயராமனின் தீவிர ஆதரவாளர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளில் கிருஷ்ணகுமார் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அவர் ஆற்றிய கட்சிப் பணிகளை கருத்தில் கொண்டு இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.பாஜக சார்பில் பொள்ளாச்சி தொகுதிக்கு வேட்பாளராக கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் அறிவிக்கப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சி பணிகளைத் தாண்டி பொள்ளாச்சி தொகுதியில் பல்வேறு சமூகப் பணிகளையும் ஆற்றி வரும் வசந்தராஜனுக்கு, மக்கள் செல்வாக்கு அதிகம் இருப்பதாகவும், கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு பாஜக-வின் முகமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் காரணத்தால், அவர் வேட்பாளராக தேர்வாகும் வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.