மதுரை மக்களவைத் தொகுதியின் உத்தேச வேட்பாளர்கள் யார்?
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யார் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது பற்றி களம் யாருக்கு பகுதியில் காணலாம்...
நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியை மீண்டும் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கே ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனைத்தான் இந்த முறையும் வேட்பாளராக களமிறக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன், கடந்த தேர்தலிலேயே 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அதனடிப்படையில் திமுக கூட்டணிக்கு வலு சேர்க்கும் ஒரு வேட்பாளராக சு.வே இருப்பார் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக இம்முறை நேரடியாக களம் காணவுள்ளதாகவும், அக்கட்சியின் சார்பில் பிரபல மருத்துவரும், மாநில மருத்துவர் அணி இணை செயலாளருமான சரவணன் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019-ம் ஆண்டு நடந்த திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற டாக்டர் சரவணன் 2021-ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
பாஜக சார்பில் இந்த முறை தேசிய பொதுக்குழு உறுப்பினரும், மதுரை கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான ஏ.ஆர் மகாலட்சுமி போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாஜக-வில் தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவர், 2011 மற்றும் 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக சார்பாக மதுரை தெற்கு தொகுதியில் களமிறக்கப்பட்டார்.