மத்திய சென்னையில் களம் காணப் போகும் வேட்பாளர்கள் யார்?
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யார் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது பற்றி நியூஸ் 7 தமிழின் களம் யாருக்கு பகுதியில் காணலாம்…
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக மத்திய சென்னை தொகுதிக்கு வேட்பாளராக, 2019-ம் ஆண்டு தேர்தலில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தயாநிதி மாறனை முன்னிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய நாடாளுமன்ற தேர்தல்களில், மத்திய சென்னை தொகுதியில் 8 முறை வெற்றியை பதிவு செய்துள்ள திமுக, மீண்டும் வெற்றியை மட்டுமே குறிவைத்து களம்காண உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதிமுக சார்பில் மத்திய சென்னை தொகுதிக்கு வேட்பாளராக எஸ்.ஆர்.விஜயகுமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளரான எஸ்.ஆர் விஜயகுமார், 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு வென்றிருந்த நிலையில் அவருக்குத் தான் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
பாஜக வேட்பாளர் பட்டியலை பொறுத்தவரை மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட, அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவரான வினோஜ் பி.செல்வத்திற்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலின்போது துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட வினோஜ், இம்முறை மத்திய சென்னை தொகுதியில் களமிறங்கவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்புவுக்கும், மத்திய சென்னை தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.