கன்னியாகுமரி தொகுதியில் களம் காணப் போவது யார்?
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யார் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது பற்றி களம் யாருக்கு பகுதியில் காணலாம்…
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியை கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவே திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அந்த தொகுதியில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள விஜய் வசந்துக்கே வேட்பாளர் வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது. மற்றொருபுறம் திமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை, மீனவ சமுதாய மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என மீனவ பிரதிநிதிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் இருந்து முனைவர் நசரேத் பசிலியான் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 38 ஆண்டுகளாக திமுக-வில் அங்கம் வகித்த பசிலியான், சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுக-வில் இணைத்துக்கொண்டார். இதை ஈபிஎஸ்-ன் தேர்தல் யுக்தி எனவும், மீனவ சமுதாயத்தினரிடையே செல்வாக்கு நிறைந்த பசிலியானுக்கே இந்த முறை வேட்பாளர் சீட் எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாய்ப்பு கேட்டு தேசிய தலைமையை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. தொகுதிக்கு மிகவும் அறிமுகமான முகம் என்ற வகையில் அவரே பாஜக-வின் முதல் சாய்ஸாக இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.மற்றொருபுறம் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜனும் நெல்லை தொகுதி கிடைக்காவிட்டால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதே போல மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளரும், நாகர்கோவில் மாநகராட்சியின் 51வது வார்டு உறுப்பினருமான ஐயப்பன் கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளராக களமிறங்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.