அழுத்தம் கொடுத்ததும் நிதீஷ் குமார் 'யூ டர்ன்' போட்டுவிட்டார் - ராகுல் காந்தி விமர்சனம்!
காங்கிரஸும், ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதீஷ் குமாருக்கு அழுத்தம் கொடுத்ததால், நிதீஷ் குமார் யூ டர்ன் போட்டுவிட்டார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் கடந்த ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கி, நேற்று பீகாரில் நுழைந்த நிலையில், இரண்டாவது நாளாக அராரியா மாவட்டத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது புகைப்படத்துக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
“நிதீஷ் குமார் ஏன் கூட்டணியில் இருந்து விலகினார் என்பது எனக்கு புரிகிறது. பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி அவரிடம் நேரடியாக கூறினேன். காங்கிரஸும், ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதீஷ் குமாருக்கு அழுத்தம் கொடுத்தோம். ஆனால், இந்த கணக்கெடுப்பு பாஜகவிடையே பயத்தை உண்டாகியது. அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள். இதனால், பாஜக நிதிஷ் குமாருக்கு பின்வாசலைத் திறந்துவிட்டுள்ளது.
உங்களுக்கு அனைத்து சமூக நீதியையும் வழங்குவது இந்தியா கூட்டணியின் பொறுப்பு. அதற்கு நிதிஷ் குமார் எங்களுக்கு தேவையில்லை.” எனத் தெரிவித்தார்.