#Haryana வாக்கு எண்ணிக்கையில் என்ன தான் நடக்கிறது? பூபேந்தர் சிங் ஹூடா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
ஹரியானா சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை சரியாக அப்டேட் செய்யவில்லை என ஹரியானா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானா சட்டமன்றத்துக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 67.90% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த 2 கட்சிகள் தவிர இந்திய தேசிய லோக் தளம் – பகுஜன் சமாஜ் கூட்டணியும், ஜனநாயக ஜனதா கட்சி – ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணியும் களத்தில் உள்ளன. காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஆம் ஆத்மி கட்சி தனித்து களமிறங்கியது.
90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், தற்போது அங்கு பாஜக 50 தொகுதிகளிலும், காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகின்றன. பாஜக ஹரியானாவில் 3வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹரியானா சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை சரியாக புதுப்பிக்கப்படவில்லை என ஹரியானா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடா குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
"எனக்கு கிடைத்த தகவலின்படி, ஹரியானா சட்டமன்ற தேர்தலில் நாங்கள் (காங்கிரஸ்) பெரும்பான்மையை பெற்றுள்ளோம். நாங்கள் வெற்றி பெற்ற பல இடங்கள் உள்ளன. ஆனால், ஹரியானா சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை சரியாக புதுப்பிக்கப்படவில்லை."
இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.