For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை அம்பேத்கரின் சட்டப்புத்தகத்தை வணங்க வைத்துள்ளோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

09:20 PM Jun 15, 2024 IST | Web Editor
“அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை அம்பேத்கரின் சட்டப்புத்தகத்தை வணங்க வைத்துள்ளோம்”   முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு
Advertisement

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களைப் அம்பேத்கர் கொடுத்த சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தல் உட்பட தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஜூன் 15) நடைபெற்றது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

“கடந்த முறை இங்கே நான் கலந்துகொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் ‘டிரெண்ட்’ ஆனது. அதற்குக் காரணம், எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை,  ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து முடித்துவைத்தார். ராகுலின் அந்த அன்பை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நம்முடைய எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாற்பதும் நமதே என்று முழங்கினேன்! நடக்குமா? நடக்க விடுவார்களா? என்று பலரும் யோசித்தார்கள். ஆனால், நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. என் நம்பிக்கைக்கு அடித்தளம் யார்? கொள்கைக்காக இங்கே கூடியிருக்கும் மக்கள்தான் என்னுடைய நம்பிக்கைக்கு அடித்தளம்.

இங்குள்ளவர்கள், “வெட்டி வா” என்று சொன்னால் “கட்டி வருகிறவர்கள் மட்டுமல்ல”, அதை வைத்துக் கோபுரம் எழுப்பக் கூடியவர்கள் என்று மீண்டும் நிரூபித்துவிட்டார்கள். இந்த வெற்றிவிழா தனிப்பட்ட ஸ்டாலினுக்கு நடைபெறும் பாராட்டு விழா அல்ல; இந்த மேடையில் இருக்கும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா. இந்தியா கூட்டணி தொண்டர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது.

இது சாதாரண வெற்றி இல்லை, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. எல்லாவற்றுக்கும் மேல், நம்முடைய அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்களே தமிழ்நாட்டு மக்கள், அவர்களுக்கான வெற்றி! 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றியை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெற்றுத் தந்தார்.

அதுமட்டுமில்லை, 2004 கருத்துக்கணிப்புகளில், மத்திய அளவில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று சொன்னார்கள். ஆனால், காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சியைப் பிடித்தது. இப்போதும் அதே மாதிரிதான், பாஜக 400 இடங்கள் வரை கைப்பற்றும் என்று சொன்னார்கள். ஆனால், அதை உடைத்து தனித்து அரசு அமைக்க முடியாத நிலைமையை உருவாக்கியிருக்கிறோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களைப் அம்பேத்கர் கொடுத்த சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறோமே, இதுதான் கருணாநிதியின் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால், இந்தியா கூட்டணியின் 41வது வெற்றி. 2024-இல் பெற்றிருக்கின்ற 40-க்கு 40 வெற்றி, திமுக அரசு மேல், மக்களுக்கு இருக்கிற திருப்தியில் கிடைத்திருக்கின்ற வெற்றி. நம்முடைய தொடர் வெற்றிக்குக் காரணம் கொள்கை உறவோடு கடந்த ஐந்து தேர்தல்களாகத் தமிழ்நாட்டில் தொடர்கின்ற கூட்டணியின் ஒற்றுமைதான் நம்முடைய வெற்றிக்கு அச்சாணி. இந்த மேடையில் இருக்கின்ற தலைவர்களுக்கிடையில் இருப்பது வெறும் தேர்தல் உறவு கிடையாது. கொள்கை உறவு.

2023-இல் நடைபெற்ற என்னுடைய பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்திலேயே அகில இந்திய தலைவர்கள் அருகில் வைத்துக் கொண்டே ‘காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது’ என்று மேடையில் அறிவித்தேன். அகில இந்திய அளவில் பாஜகவை தனிமைப்படுத்தினால்தான் வெற்றி பெற முடியும் என்று எடுத்துச் சொன்னேன்.  எல்லாவற்றையும் விட நாட்டின் எதிர்காலமும் ஜனநாயகமும்தான் முக்கியம் என்று தொடர்ந்து சொன்னேன்.அதனுடைய விளைவாகத்தான், 28 கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியை உருவாக்கினோம். 

நாம் ஒன்று சேரமாட்டோம் என்று நினைத்த பாஜகவுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. உடனே இந்த கூட்டணி ஒன்று சேரக் கூடாது என்று என்னவெல்லாம் செய்தார்கள். ஒவ்வொரு கட்சிகளையும் I.T., E.D., C.B.I., போன்ற புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டினார்கள். காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வங்கிக் கணக்கை முடக்கினார்கள். டெல்லி முதலமைச்சரையும், ஜார்க்கண்ட் முதலமைச்சரையும் கைது செய்தார்கள்.

அதுமட்டுமல்ல, தேர்தல் அறிவித்த பிறகு பாஜக என்னவெல்லாம் செய்தார்கள்? விதிகளை மீறி மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதுபோன்று தேர்தல் பிரசாரம் செய்தார்கள். சிறுபான்மைச் சமூகத்தினரைத் தரக்குறைவாகப் பேசினார்கள். உத்திரபிரதேசத்திலும், ஒடிசாவிலும் தமிழர்களைக் கொச்சைப்படுத்தினார்கள். ஏராளமான போலிச் செய்திகளையும், அவதூறுகளையும் பல கோடி ரூபாய் செலவில் வாட்ஸ்ஆப்பில் பரப்பினார்கள். இவ்வளவு செய்தும், பா.ஜ.க. வாங்கியது 240 தான். இந்த 240 என்பது, மோடியின் வெற்றி இல்லை; மோடியின் தோல்வி” 

என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags :
Advertisement