"யாருக்கும் நாங்கள் அடிமை கிடையாது" - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்!
நெல்லை டவுன் கோளரி நாதர் ஆதீனத்தில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றத்துடன் விஸ்வகர்ம ஜெயந்தி விழா ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தார் .
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜேந்திரபாலாஜி, "திமுக கரூர் மாநாட்டின் போது மழை பெய்து கலைந்து விட்டது. மாநாட்டின் அறிகுறியே சரியில்லை. எந்த கட்சியும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையிலேயே அரசியல் செய்வார்கள். அதன் அடிப்படையிலேயே தமிழக முதலமைச்சரும் மீண்டும்
ஆட்சிக்கு வருவோம் என மாநாட்டில் சொல்லி உள்ளார். கள நிலவரம் முதல்வருக்கு தெரியும். தமிழக கள நிலவரம் அதிமுகவிற்கு சாதகமாக உள்ளது. அதிமுக பாஜக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது.
பொய்யான தகவல்களை சொல்லி மக்களை திசை திருப்பி இந்த முறை வாக்குகளை வாங்கலாம் என்ற திமுக தலைமையின் எண்ணம் இந்த தேர்தலில் ஈடேறாது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்த திமுகவை இந்த தேர்தலில் வரவிட மாட்டோம். சால்வை போட்டால் நானே முகத்தை துடைப்பேன். எடப்பாடி பழனிச்சாமி முகத்தை துடைத்ததை வைத்து எதையாவது சொல்ல வேண்டாம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்கிறார் என்பதை தான் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி எதை செய்தாலும் குறையாக பார்க்கும் கட்சிதான் திமுக. எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். திமுக பேசுவதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ முறைப்படி அதனை கொடுத்து போலீஸ் வாகனங்கள் அணிவகுக்க உள்துறை அமைச்சர் வீட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதிலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டும் பாஜகவும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் மத்திய அரசும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எத்தனை முக்கியத்துவமும் முன்னுரிமை கொடுத்துள்ளது என்பது. அதிமுக எடப்பாடி பழனிசாமியின் வருகையை பாஜகவும் மத்திய அரசும் எதிர்பார்த்து இருந்ததை டெல்லி சந்திப்பு உணர்த்தி உள்ளது. எந்த ரைடுக்கும் அண்ணா திமுக பயப்படாது. யாரைக் கண்டும் அதிமுக பயப்பட வேண்டியது கிடையாது என்பதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்திவிட்டார். யாருக்கும் நாங்கள் அடிமை கிடையாது யாரையும் அடிமைப்படுத்துவது கிடையாது. இதுதான் அதிமுகவின் நோக்கம்.
அதிமுக, பாஜக பலமான இயக்கம் பலமான கூட்டணி. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் கூட்டணி என ஏழை எளிய மக்கள் நினைக்கும் கூட்டணியாக உள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி தான் வெல்லும் கூட்டணி என திமுக எண்ணுகிறதால் எதிர்க்கட்சிகள் மாற்று கட்சிகள் இந்த கூட்டணியை கண்டு பயப்படுகிறது. விஜய் வருகையால் அதிமுகவுக்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது. அவரது வருகையால் பாதிக்கப்படக்கூடிய கட்சி எல்லாம் திமுகவின் கூட்டணி கட்சிகள் தான். அதிமுகவிற்கு ஏற்றமே இருக்குமே தவிர இறக்கமே கிடையாது. 2026 அதிமுகவிற்கு ஏறுமுகம். ஆட்சி அமைக்கும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவார்" என்று தெரிவித்துள்ளார்.