“எங்களை பயன்படுத்தி ராகுல் அண்ணா மீது அவதூறு பரப்புவதா?” - வில்லேஜ் குக்கிங் சார்பில் விளக்கம்.. நடந்தது என்ன?
வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவின் பெயரை பயன்படுத்தி, காங்கிரஸ் மீது பாஜக ஆதரவாளர் ஒருவர் பொய் குற்றச்சாட்டை வெளியிட்டார். இதுகுறித்து வில்லேஜ் குக்கிங் சேனல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பரப்புரை நாளையுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், அமித்ஷா என பலரும் வருகை தந்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ராகுல்காந்தி பற்றி பாஜக ஆதரவாளர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், “யூட்யூபில் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தா பெரியதம்பியின் உடல்நல பாதிப்புக்கு உதவுமாறு நெல்லைக்கு வந்த ராகுல் காந்தியிடம் கேட்ட போது அவர் மறுத்து விட்டதாகவும், இதனால் அந்த சேனலை சார்ந்தவர்கள் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலுக்காக எங்களை பயன்படுத்தி விட்டு, நாங்கள் வெளிநாடு செல்ல உதவுகிறேன் என ராகுல்காந்தி சொன்னார். ஆனால் இன்றைக்கு பணம் கூட கேட்கவில்லை. நவீன மருத்துவ வசதிகள் தான் செய்து தருமாறு கேட்கிறோம். ஆனால் அதை நிராகரித்து விட்டார்கள்” என வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இதுகுறித்து, வில்லேஜ் குக்கிங் சேனல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ”இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதர் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்!” என அந்த சேனலின் அட்மின் சுப்பிரமணியன் வேலுசாமி தெரிவித்துள்ளார்..
இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்!https://t.co/smhjYbt12o
— Subramanian Velusamy (@vstamilan) April 16, 2024
இந்த மறுப்பு செய்தி வில்லேஜ் குக்கிங் சேனல் சார்பாக பதிவிடப்பட்ட சில நிமிடங்களில் பாஜக ஆதரவாளர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி வில்லேஜ் குக்கிங் சேனலில் இருப்பவர்களுடன் இணைந்து சமைத்து சாப்பிட்டார். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.