“அதிமுக கட்சி மற்றும் ஈபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" - ஓ.பன்னீர் செல்வம் பதில் மனு!
அ.தி.மு.க. கட்சியினுடைய இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது என்று ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சூர்யமூர்த்தியின் மனு மீது தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து கடந்த டிச.23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் எடப்பாடி பழனிசாமி, வா.புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சூர்யமூர்த்தி ஆகியோர் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப்பெற வேண்டும். அதிமுக முதன்மை உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுத்ததே சட்டப்பூர்வமானது.
ஒரு முறை முதன்மை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுத்த கட்சி தலைமை 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். முதன்மை உறுப்பினர்களால் தேர்வான கட்சித் தலைமையை பொதுக்குழுவின் தீர்மானம் மூலம் மாற்ற முடியாது. தன்னை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடியின் நடவடிக்கை அதிமுகவின் அடிப்படை விதிக்கு எதிரானது, சட்டவிரோதமானது. தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தனக்கே சொந்தம்.
எடப்பாடி தலைமையில் தற்போதுள்ள கட்சி நிர்வாகம் சட்டவிரோதமானது. சட்டவிரோதமாக செயல்படும் தலைமை இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அதிகாரமில்லை. அ.தி.மு.க. கட்சியின் இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது. தன்னிடம் கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் ஒப்படைக்க வேண்டும். தற்போதைய அதிமுக கட்சி மற்றும் ஈபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் வசம் இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் ஒப்படைக்க வேண்டும், எங்கள் தரப்பையே அதிமுக என்று அங்கீகரிக்க வேண்டும். அதிமுக தொடர்பாக உரிமை வழக்குகள் (Civil Suit) தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, எனவே அதில் முடிவு வரும் வரை ஈ.பி.எஸ் வசம் உள்ள கட்சி தொடர்பான அதிகாரங்கள், உரிமைகளை தேர்தல் ஆணையம் திரும்ப பெற வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.