For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இளைஞர்களை வேலைவாய்ப்பின்றி தவிக்க விடுவதே பாஜகவின் ஒரே சாதனை!” - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!

02:48 PM Jul 09, 2024 IST | Web Editor
“இளைஞர்களை வேலைவாய்ப்பின்றி தவிக்க விடுவதே பாஜகவின் ஒரே சாதனை ”   மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
Advertisement

வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதை தரவுகளுடன் வெளியிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில்,

“லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) நிகழாண்டு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அரசு தரப்பில் தரப்பட்டுள்ள தரவுகளை ஆராய்ந்ததில், இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கல்வியறிவு பெற்றவர்களிடையே வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும், பணியிடங்களில் பெண்களின் பங்கு குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மோடி அரசு தனியார் பொருளாதார அறிக்கைகளை நிராகரித்துள்ளது. ஐஎல்ஓ அறிக்கையின்படி, இந்தியாவில் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோரில் 83% இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024இன் இந்திய வேலைவாய்ப்பு அறிக்கையின்படி, 2012 - 2019 வரையிலான காலத்தில் சுமார் 7 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும், ஆனால் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் வெறும் 0.01% மட்டுமே இருப்பதாய் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது.

2015 - 2023 வரையிலான 7 ஆண்டுகளில், உற்பத்தி துறையில், 54 லட்சம் பணிகள் பறிபோயுள்ளன. நாடு முழுவதும் 2010-11 வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் 10.8 கோடி தொழிலாளர்கள் வேளாண் சாரா தொழில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மறுபுறம், 2022-23 வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் மேற்கண்ட துறைகளில் வேலைவாய்ப்பு விகிதம் 10.96 கோடி அளவை எட்டியுள்ளது. இதன்மூலம், 12 ஆண்டுகளில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

சமீபத்திய உழைப்பாளர் வர்க்க (பிஎல்எஃப்எஸ்) ஆய்வின்படி, 2024 நிதியாண்டின் நான்காம் காலாண்டில், நகர்ப்புறங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் 6.7% ஆக உயர்ந்துள்ளது. மறுபக்கம், மோடி அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட்டதாக (இபிஎஃப்ஓ) தரவுகள் மூலம் வெளிக்காட்டிக் கொள்கிறது. அவ்வாறே ஆயினும், கடந்தாண்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் விகிதம் 10% சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிஎம்ஐஇ அறிக்கையின்படி, நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.2% அளவை எட்டிவிட்டதெனவும், பெண்களிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் 18.5% ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் கடந்தாண்டு அறிக்கையின்படி, 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் 42.3% பேர் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

சமீபத்திய தனியார் பொருளாதார நிறுவன ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12 மில்லியன்(1.20 கோடி) பணியிடங்கள் தேவைப்படுவதாகவும், ஆனால், தற்போதைய 7 சதவிகித உள்நாட்டு ஜிடிபி வளர்ச்சி விகிதம், தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போதாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசின்கீழ், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி சராசரியாக 5.8 சதவிகிதமாக மட்டுமே இருப்பதாகவும் பதிவிட்டுள்ள கார்கே, பொதுத் துறை, தனியார் துறை, சுய வேலைவாய்ப்பு, ஒருங்கிணைக்கப்படாத துறைகள் என எந்த துறையானாலும் இளைஞர்களை வேலைவாய்ப்பின்றி தவிக்க விடுவதே மோடி அரசின் ஒரே சாதனை” என விமர்சித்துள்ளார்.

Tags :
Advertisement