"2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம்" - தவெக தலைவர் விஜய் பேச்சு
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 1,400க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, மேடையில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:-
"சொல்ல முடியாத அளவிற்கு வேதனையிலும் வலியிலும் இவ்வளவு நாள் நாம் இருந்தோம். இந்த சூழலில் நம்முடைய சொந்தங்களின் மனம்பற்றி இருக்க வேண்டியது நம் கடமை. அதனால்தான் இவ்வளவு காலம் மௌனம் காத்து வந்தோம். அப்படி அமைதியாக இருந்த நேரத்தில் நம்மை பற்றி வன்ம அரசியல் வலைகள், அர்த்தமற்ற அவதூறுகள் என நம்மை சுற்றி பின்னப்பட்டது பரப்பப்பட்டது. இவற்றை அனைத்தையும் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணையோடு துடைத்து எறிய தான் போகிறோம்.
ஆனால் அதற்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு உரைக்கு ஒரு நாகரீக பதிலடி கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இல்லாத அதிக கட்டுப்பாடு நமக்கு கொடுக்கப்பட்டிருந்தது. பிரச்சார நேரத்தில் பேருந்துக்குள் மட்டும் தான் இருக்க வேண்டும், மக்களை பார்த்து கையசைக்க கூடாது, பேருந்து மேலே ஏறக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. உச்சபட்ச அதிகார மயக்கத்தில் இருந்து கொண்டு முதலமைச்சர் பேசினாரோ? முதலமைச்சர் பேச்சில் மட்டும் தான் மனிதாபிமானம் உள்ளது. 1972-க்குப் பிறகு கேள்வி கேட்க யாரும் இல்லாததால் திமுகதலைமை இப்படி மாறி விட்டது.
அரசின் விசாரணை மீது சந்தேகம் என உச்சநீதிமன்றம் கூறினால் அதற்கு என்ன அர்த்தம்? திமுக அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை புதைந்து விட்டது. மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம் என திமுக அறிக்கையை இப்போதே தயாரித்து வைத்து கொள்ளலாம். இயற்கையும் இறைவனும் மக்கள் சக்தியாக நம்முடன் இருக்கப் போகிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள இடையூறு தற்காலிகமானதுதான். 2026 சட்டசபை தேர்தலில் திமுக - தவெக இடையில் தான் போட்டி. திமுக - தவெக போட்டி என்பது மீண்டும் வலிமை அடையப் போகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி தமிழக வெற்றிக்கழகத்திற்கு தான்"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.