For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மோடி தலைமையிலான அரசு ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி..” - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

09:42 PM Jun 05, 2024 IST | Web Editor
“மோடி தலைமையிலான அரசு ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி  ”   விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
Advertisement

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் இன்று வெளிவந்தன. இதன்படி, நடந்து முடிந்த தேர்தலில், பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாகவே பெற்றுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருமாவளவன் பேசியதாவது,

“நாட்டின் அரசியலமைப்பை காக்க வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் வேண்டுகோளை மக்கள் நிறைவேற்றியுள்ளனர். தனிப் பெரும்பான்மை பெற முடியாத பின்னடைவு பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது. எனவே, நரேந்திர மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது பொருத்தமானது இல்லை. இந்தியா கூட்டணி அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறது. உரிய நேரத்தில் சூழல்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுப்போம் என்று அனைத்து தலைவர்களும் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. அதைப் பற்றி பெரிதாக யாரும் கூட்டத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று இருந்தாலும் மக்களின் தீர்ப்பு மோடிக்கு எதிராக உள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்நேரத்திலும் கருத்து வேறுபாடு எழ வாய்ப்புள்ளது. பாஜகவை ஆட்டிப்படைக்கும் அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.
நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு மற்றும் ஏக் நாத் ஷிண்டே தங்களுடைய முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement