பிரதமர் மோடி ஆகஸ்ட் 28ல் ஜப்பான் பயணம்!
இந்திய பிரதமர் மோடி வரும் 28 ஆம் தேதி ஜப்பான் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பிரதமர் மோடி ஆக. 28-ஆம் தேதி மாலை ஜப்பானுக்கு புறப்படுகிறார். மேலும் ஆக. 29, 30 ஆகிய இரு நாட்களில் அவர் 15-ஆவது இந்தியா - ஜப்பான் இருதரப்பு வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த சந்திப்புன்போது பிரதமர் மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
தொடர்ந்து, ஆக. 31 ஜப்பானிலிருந்து சீனா செல்லும் பிரதமர் மோடி அங்கு டியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டின் போது அவர் பிற நாட்டுத் தலைவர்களுடன் இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயணமானது பிரதமர் மோடியின் எட்டாவது ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணமாகும். மேலும் அவர் ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் முதல்முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்படத்தகுந்தது.