"ஏழைகளை மையப்படுத்தி பாஜக வின் ஆட்சி உள்ளது" - டெல்லியில் அண்ணாமலை பேச்சு!
ஏழைகளை மையப்படுத்தி பாஜக வின் ஆட்சி உள்ளது என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
டெல்லி பாஜக தென்னிந்திய பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கடந்த பத்தாண்டுகளில் இதுவரை இல்லாத வகையில் தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :
"மத்திய அமைச்சர் சுஷ்மாஸ்வராஜுக்கும் தமிழ் சொந்தங்களுக்கும் நெருங்கிய நட்பு உள்ளது. அவரது மகள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சராக தமிழ்நாடு மீனவர் பிரச்னைகளை தீர்த்தவர் சுஷ்மா ஸ்வராஜ். டெல்லியில் தமிழ் மக்களுக்கு தனிப்பெருமை உள்ளது.
திருவள்ளுவரை பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. மேலும், கடந்த பத்தாண்டுகளில் இதுவரை இல்லாத வகையில் தமிழ் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை காசி தமிழ் சங்கமும், சௌராஷ்டிரா தமிழ் சங்கமும் நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. ஏழைகளை மையப்படுத்தி பாஜக வின் ஆட்சி உள்ளது. டெல்லியில் ஏழு வேட்பாளர்களையும் வெற்றி பெற வைப்பது தமிழர்களின் கடமை. கலால் கொள்கை ஊழலில் முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் சிறையில் இருக்கிறார்கள். மொகல்லா கிளினிக்களில் 20,000 மேற்பட்ட தரம் குறைந்த மருந்துகளை வழங்கி ஊழல் செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : கனடாவில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டது உள்நாட்டு அரசியல்” – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!
சுத்தம் செய்கிறோம் என்று கூறி 6000 கோடி ஊழல் செய்துள்ளனர். கழிப்பறையை வகுப்பறையாக காட்டி ஊழல் செய்துள்ளனர். சுயநிதி குழுக்களுக்கு ஒரு லட்சம் போலி கணக்குகளை உருவாக்கி ஊழல் செய்துள்ளனர்.
ஆம் ஆத்மி, காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளுடன் டெல்லியில் தேர்தல் களத்திற்கு வந்துள்ளனர். யமுனை நதியை தூய்மைப்படுத்துவோம் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பல ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை யாருக்கும் புதிதாக கொடுக்கப்படவில்லை. மேலும் , ஏழை மக்களுக்கு எதுவும் செய்யாத கட்சியாகவே காங்கிரஸ் உள்ளது"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.