“2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் கூறுவது கனவு தான்” - எடப்பாடி பழனிசாமி பேட்டி!
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் கூறுவது கனவு எனவும், அது பலிக்காது எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் கதிரவன் இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்துகொண்டார். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி ,
“ப.சிதம்பரத்துக்கும் அதிமுகவுக்கும் என்ன தொடர்பு? எங்கள் கட்சி முடிவை அவர் ஏன் விமர்சனம் செய்கிறார். இடைத்தேர்தலில் திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி மாறி மாறி கிடைக்கும். இடைத்தேர்தல் சுதந்திரமாக நியாயமாக நடைபெறாது. பணபலத்தை அதிகார பலத்தை கையில் வைத்துக் கொண்டு தேர்தலை சந்திப்பதால் நாங்கள் போட்டியிடவில்லை.
நடைபெற உள்ள தேர்தலில் ஆட்சி, அதிகாரம், பரிசு வழங்குவார்கள், பணம் கொடுப்பார்கள், அமைச்சர்கள் குவிந்து வேலை செய்வார்கள். எனவே அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது. விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் 6000 ஓட்டுக்கள் தான் குறைவு. நாடாளுமன்றத்திற்கு ஒரு முறையிலும் சட்டமன்றத்திற்கு ஒரு முறையிலும் மக்கள் வாக்களிப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் கூறுவது கனவு தான். அது பலிக்காது”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.