”பாஜக விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது” - சீமான்..!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகாசியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
"பட்டாசால் ஏற்படும் காற்று மாசுவை விட நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றில் இருந்து அதிக மாசு ஏற்படுத்துகிறது. பெரிய முதலாளிகளை விட்டு விட்டு, சிவகாசி போன்ற சிறிய ஊரில் இருக்கும் சிறு முதலாளிகளின் பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இங்கு வந்து பார்த்து விட்டு அதன்பின் பட்டாசு குறித்து தெரிவிக்க வேண்டும். மக்களின் வாழ்வதற்கு அடிப்படையான பஞ்ச பூதங்கள் குறித்து எதிர்கால தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீர், மரம், மலை, கடல் என மாநாடு நடத்தி வருகிறேன்.
பாஜக விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது என்பது தெரிகிறது. பாஜக எம்பிக்கள் குழு இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கொடுப்பதை விட, அரசை குறை கூறுவதில் தான் மும்முரமாக உள்ளனர்.
கரூர் சம்பவத்திற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என கூறுபவர்கள், மணிப்பூர் கலவரத்துக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என கூறவில்லை. கரூர் சம்பவத்திற்கு விஜய் முதலில் பொறுப்பேற்க வேண்டும். எல்லாமே அரசு என்று கூறுவதை ஏற்க முடியாது.
இதே நீதிபதி ஆணையத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து 3 மணி நேரம் சாட்சியம் அளித்தேன். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்பள உயர்வுடன் பணியிட மாறுதல் நடந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு உண்மை கண்டறியும் குழு அமைக்காத பாஜக, இப்போது அமைப்பது அரசியல்.
கள்ளச்சாரய மரணத்துக்கு காரணமான முதல்வர் செல்லவில்லை. ஆனால் விஜய் சென்றார். தற்போது கரூர் உயிர் பலிக்கு காரணமான விஜய் செல்லவில்லை, ஆனால் முதல்வர் செல்லவில்லை.
குடித்து விட்டு இறந்தவர், நடிகரை பார்க்க வந்து இறந்தவருக்கு இழப்பீடு வழங்கும் தமிழக அரசு, மீனவர், ராணுவ வீரர் இறந்தால் எவ்வளவு லட்சம் கொடுக்கிறது. திருவண்ணாமலையில் காவலர்கள் இரு ஆந்திர பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தலைகுனிவு. டி.வி.கே, டி.எம்.கே என பெயரில் மட்டுமே இருவருக்கும் ஒற்றுமை உள்ளது" என்று பேசினார்.