சுக்தேவ் சிங் கொலை வழக்கு - 3 குற்றவாளிகளை கைது செய்தது டெல்லி காவல்துறை..!
ராஷ்ட்ரீய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கொலை வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகளை டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
ராஜஸ்தானில் வலதுசாரி அமைப்பான ராஷ்ட்ரீய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் மர்ம நபர்கள் சிலரால் கடந்த 5-ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து ராஷ்ட்ரீய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு முழு அடைப்பு போராட்டமும் அறிவித்தது.
இதனிடையே கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். பஞ்சாப்பைச் சேர்ந்த பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்தவர்கள் சுக்தேவ் சிங்கை கொலை செய்திருக்கலாம் என முன்னதாக காவல்துறை சந்தேகித்தது.
இதையும் படியுங்கள் : அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்நிலையில், சுக்தேவ் சிங் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை ராஜஸ்தான் போலீசாருடன் இணைந்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சுக்தேவ் சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற ரோகித் ரத்தோர், நிதின் பவுஜி ஆகிய இரண்டு பேரையும், அவர்களுக்கு உதவிய உத்தம் சிங்கையும் போலீசார் கைது செய்துள்ளனர்.