"மாட்டிக்கிட்ட பங்கு"... திருமண பத்திரிகையால் போலீசில் சிக்கிய திருடர்கள்!
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள கொடாலா பகுதியைச் சேர்ந்தவர் போரு காண்டு பின்னார் (30). இவர் கடந்த மாதம் 28-ம் தேதி வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 நபர்கள் அந்த வேனை வழிமறித்து, தங்கள் வாகனம் பழுதாகிவிட்டதாகவும், கூறி லிஃப்ட் கேட்டனர். இதனை நம்பிய போரு பின்னார், அவர்கள் மூவரையும் வேனில் ஏற்றுமாறு ஓட்டுநரிடம் கூறினார்.
இந்த சூழலில், 3 பேரும் மறைத்து வைத்திருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து வேனில் இருந்த இருவர் முகத்திலும் வீசினர். பின்னர் வேனில் இருந்த காண்டுவின் ரூ.6,85,000 பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஜவ்கார் போலீசாரிடம் போரு பின்னார் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது போலீசாருக்கு அந்த இடத்தில் ஒரு திருமண பத்திரிகை கிடைத்தது.
திருடர்கள் மிளகாய்ப் பொடியை எடுத்து வருவதற்கு அந்த பத்திரிகையை பயன்படுத்தியிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அந்த திருமண பத்திரிகை குறித்து போலீசார் விசாரிக்க தொடங்கினர். அந்த பத்திரிகையில் கிரண் ஆனந்த லாம்டே (23) என்ற நபரின் பெயர் இடம்பெற்றிருந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அந்த திருட்டில் தனக்கு தொடர்பு இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தட்டு காண்டு பின்னார் (34), பரமேஸ்வர் கம்லகார் ஜோலே (24) மற்றும் பாஜிராவ் பெஹ்ரே (24) ஆகிய 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் தட்டு காண்டு பின்னார் என்பவர், பாதிக்கப்பட்ட போரு காண்டு பின்னாரின் சகோதரர் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்தான் இந்த திருட்டு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் முழுவதும் கைதானவர்களிடம் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.