மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ; திண்டிவனத்தில் 14ம் தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ் நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களை பல்வேறு வகைகளில் பாதுகாக்கும் மாநிலமாகத் திகழ்ந்த தமிழ் நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு, திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செயல்படுகின்றனர். இந்த திமுக ஆட்சி தமிழ் நாட்டை அலங்கோல நிலைக்கு தள்ளிவிட்டதன் அடையாளம் தான் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும்; பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும் அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தொடர்ச்சியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், இதுவரை திமுக அரசு எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இந்நிலையில், தமிழ் நாட்டில் பெருகிவரும் பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கலாச்சாரம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் திண்டிவனத்தில் நிகழ்ந்த பாலியல் சீண்டல் என தொடர்ந்து நடைபெற்று வரும் மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டக் கழகம் மற்றும் மாவட்ட மகளிர் அணியின் சார்பில், 14.11.2025 - வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், திண்டிவனம் காந்தி சிலை அருகில் முன்னாள் அமைச்சருமான திரு. C.Ve. சண்முகம், M.P. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும், பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெருந்திரளான மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.