டெல்லி கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ-விற்கு மாற்றம் - உள்துறை அமைச்சகம் உத்தரவு...!
டெல்லி செங்கோட்டை அருகே மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. திடீரென அந்த கார் வெடித்து சிதறியது. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று காலை உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பிற்பகலிலும் அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் டெல்லி கார் வெடிப்பு வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ விற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன் படி டெல்லி கார் வெடிப்பு வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ விற்கு மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.