For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“SC, ST பிரிவிற்கு தனித்தனியாக புதிய அமைச்சகங்கள்” - மக்களவையில் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!

06:07 PM Jul 29, 2024 IST | Web Editor
“sc  st பிரிவிற்கு தனித்தனியாக புதிய அமைச்சகங்கள்”   மக்களவையில் திருமாவளவன் எம் பி  வலியுறுத்தல்
Advertisement

எஸ்.சி., எஸ்.டி. பிரிவுக்கென தனித்தனியாக புதிய அமைச்சகங்களை உருவாக்க வேண்டும் என மக்களவையில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இன்று (ஜூலை 29) மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் உரையாற்றினார். அவர் பேசியதாவது,

“மத்திய பட்ஜெட் விளிம்பு நிலை மக்கள் மற்றும் ஏழை மக்களுக்கு ஏற்ற வகையில் இல்லை. கூட்டணியில் இடம்பெற்று இருக்கக்கூடிய இரண்டு, மூன்று கட்சிகளின் ஆதரவை தொடர்ந்து பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. அதனால்தான் மத்திய பட்ஜெட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். அதன் காரணமாகத்தான் அவர் நிதி ஆயோக் கூட்டத்தையும் புறக்கணிப்பதாக கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அவமரியாதை செய்து இருக்கிறார்கள். அதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்ந்த மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் சம்மரிக்ஷா சிக்‌ஷா திட்டத்தின் கீழ் நிதியை கொடுக்காமல் மிரட்டுகிறார்கள். இது கண்டனத்துக்குரியது.

நிதி வேண்டுமென்றால் புதிய தேசிய கல்விக் கொள்கையில் கையொப்பமிடுங்கள் என மிரட்டுகிறார்கள் இது கண்டனத்திற்குரியது. உர மானியம், உணவு மானியம் போன்றவற்றில் மத்திய அரசு கைவைத்துள்ளதால் விவசாயிகள் நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. கல்வித்துறைக்கு தேவையான நிதி ஒதுக்கவில்லை.

உயர்கல்விக்கு இந்த முறை ரூ.10000 கோடி அளவிற்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஐஐடி நிறுவனத்திற்கு ரூ.60 கோடி குறைக்கப்பட்டுள்ளது. பிரிவு 368ன் கீழ், இயற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் பெயர்கள் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் 3 குற்றவியல் சட்டங்கள் இந்தியில் கொண்டுவரப்பட்டுள்ளது ஏன்? இந்த மாற்றத்தை ஏன் கொண்டு வந்தீர்கள்? என நாட்டு மக்கள் சார்பாக இந்த கேள்வியை எழுப்புகிறேன். 3 குற்றவியல் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்

நாடு முழுவதும் ஆணவ படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுப்பதற்கென்று தனி சட்டத்தை உருவாக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.க்கு என தனித்தனியாக புதிய அமைச்சகங்களை உருவாக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினருக்காகவும் தனி அமைச்சகங்களை உருவாக்க வேண்டும்” இவ்வாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Tags :
Advertisement