"மத்திய அரசிடம் இருந்து சல்லிக்காசு கூட வரவில்லை!" - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு...
திருநெல்வேலியில் நடைப்பெற்ற திண்ணைப் பிரச்சாரத்தில் "மத்திய அரசிடம் இருந்து சல்லிக்காசு கூட வரவில்லை" என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் 'இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் திண்ணைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இந்தப் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார்.
இந்த பிரச்சாரத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
"நிதிநிலை அறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய நலத்திட்டங்களை எடுத்து கூறினால் இன்று ஒரு நாள் போதாது. 3 ஆண்டுகளில் 80 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.3,050 கோடி கொடுத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் மாதம் தோறும் பணத்தை மிச்சம் செய்கின்றனர்.
மத்திய அரசு திடீரென்று கேஸ் விலையை உயர்த்துகின்றது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 13 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர். பெண்கள் வீட்டில் செய்யும் வேலைக்கு இதுவரை எந்த அரசும் அங்கீகாரம் கொடுக்கவில்லை. ஆனால் திமுக அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது. அதுதான் மகளிர் உரிமைத் தொகை.
திமுக அரசு மக்களுக்கு இறுதிவரை நன்மைகளை வாரி வழங்குவோம். மத்திய அரசிடம் இருந்து சல்லி காசு வரவில்லை. திமுக அரசு மழைவெள்ள நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கியது. மத்திய அரசிடம் இருந்து இந்த நொடி வரை எந்த நிதியும் வரவில்லை."
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.